Thursday, 1 October 2015

புதியம்புத்தூர்

புதியம்புத்தூர் என்ற ஊரானது தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் ஒரு ஊர் ஆகும். இங்கு நாம் அந்த ஊரின் பெயர்காரணம் மற்றும் சிறப்புகள் பற்றி காண இருக்கிறோம்.

புதியம்புத்தூர் சற்றேரக்குறைய 400+ ஆண்டு வரலாற்றை கொண்ட ஓர் ஊராகும். இந்த ஊரானது வானம் பார்த்த பூமியாகும். வானமும் பொய்க்காது மழை தரும் இவ்வூருக்கு. இந்த ஊரில் இரண்டு குளங்கள்(கண்மாய்) உள்ளன பல நீரோடைகள் உள்ளன.

அக்காலத்தில் பருவம் தவறாது மழை பெய்தது, குளங்கள் பெருகி நீரோடைகளிலும் தண்ணீர் தாராளமாக ஓடும். இப்பகுதி வழியாக வாணிபம் செய்ய வரும் வணிகர்கள் இந்த நீரோடைகளுக்கு அருகில் சற்று ஓய்வெடுத்து செல்வது வழக்கம். அப்போது தாங்கள் கொண்டுவரும் பொருட்களை(பொதி) இறக்கி வைப்பதால் "பொதி அமர்த்தும் ஊர்" என்றும் சொல் வழக்கில் "பொதியமுத்தூர்" என்றானது அதுவே காலப்போக்கில் "புதியம்புத்தூர்" ஆனது இன்னும் சிலரோ இவ்வூரை "புதிய முத்தூர்" என்றும் கூறுகின்றனர்.

இவ்வூரில் பூர்வாங்க குடிகளாக இருந்த இல்லத்து பிள்ளைமார்கள் சிறிது விவசாயமும் மற்ற வேலைகளையும் செய்து வந்தனர் வாணிகம் செய்ய வந்த நாடார் இனத்தவர்கள் இவ்வூரின் நீர் வளத்தையும் விவசாய நிலங்களையும் பார்த்து இங்கு நிலம் வாங்கி குடிபெயர ஆரம்பித்தனர் அவர்களை தொடர்ந்து செங்குந்த முதலியார் இனத்தவர்கள், தேவர் சமூகத்தினர், தெய்வேந்திரகுல வேளாளர் இனத்தவர் மற்றும் பல சமூகத்தினர் இங்கு குடிபெயர்ந்தனர்.

விவசாயம் செழித்து ஓங்கி இந்த ஊருக்கு சிறப்பே கொய்யாபழம் என்றால் அது மிகையல்ல. பதியம்புத்தூர் கொய்யா தெற்கே குமரி முதல் மதுரை வரை புகழ் தேடி தந்தது. அது மட்டுமல்லாது பூக்கள், பருத்தி, வத்தல் மற்றும் பயிறு வகைகள் என செழித்து செல்வம் பொங்கிய ஊர் சமீப காலங்களாக மழை மற்றும் நிலத்தடி நீராதாரம் இல்லாததால் விவசாயம் மெல்ல குறைந்து போனது.

புதியம்புத்தூருக்கு கொய்யாப்பழத்திற்கு அடுத்தபடியாக பெயர் வாங்கித்தருவது ஆயத்த ஆடை(ரெடிமேட்) உற்பத்தி மற்றும் விற்பனை. சுதந்திர இந்தியாவில் சுயமாக ஒரு கிராமம் முன்னேற்ற பாதைக்கு சென்றது என்றால் அது புதியம்புத்தூர்தான். 1950ம் ஆண்டுகளில் இங்கு சாதாரண முறையில்தான் ஆயத்த ஆடைகள் தயாரிக்கப்பட்டு வந்தன இங்கு நடக்கும் வாரச்சந்தையினால் (வியாழக்கிழமை) இந்த ஆயத்த ஆடை தயாரிப்பு பிரபலமடைய தொடங்கிற்று.

1960ம் ஆண்டுகளுக்கு பின்னர் ஆயத்த ஆடைகள் தயாரிப்பு மாவட்ட அளவில் புகழ் பெற்றது பின்னர் படிப்படியாக புதியம்புத்தூரன் புதிய முகமாகவே ஆயத்த ஆடை தயாரிப்பு விளங்கிற்று. 1970ம் ஆண்டுகளில் சாதாரண பாவடை சட்டைகளுக்கு மவுசு குறைய தொடங்கியது அதனால் ஆயத்த ஆடைகளின் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

1975ம் ஆண்டுகளில் உடனடியாக ஆயத்த ஆடை தயாரிப்பில் மாற்றம் ஏற்பட்டது பின்னர் கவுன், மிடி, சுடிதர் மற்றும் பல புதிய ரகங்களை உற்பத்தி செய்யத்தொடங்கி இன்றுவரை ஆயத்த ஆடை தயாரிப்பில் தமிழகத்திலே சிறந்து விளங்குகிறது. கொல்கத்தா, மும்பை, நாக்பூர் மற்றும் பிற மாநிலங்களில் தயாரிக்கப்படும் ஆயத்த ஆடை தயாரிப்புகளுக்கு சற்றும் குறைவில்லாமல் வியாபார போட்டியை சமாளித்து வருகிறது.

புதியம்புத்தூரில் இந்து மதம் சார்ந்தவர்கள் அதிகமாகவும், கிறிஸ்தவ மதம் சார்ந்தவர்கள் குறைவாகவும், இஸ்லாம் மதம் சார்ந்த சில குடும்பங்களும் இருக்கின்றன. இங்கு மதம் சார்ந்த பிரச்சனைகள் வந்ததில்லை. இஸ்லாம் மத பண்டிகை இந்துக்கள் மற்றும் கிறிஸ்த்தவர்களுடன் சேர்ந்தே கொண்டாடும் வழக்கமுள்ளது.

புதியம்புத்தூர் பழைய திருநெல்வெலி மாவட்டம் இன்றைய தூத்துக்குடி மாவட்டமான ஓட்டப்பிடாத்திற்கு அருகில் உள்ளது. புதியம்புத்தூரிலிருந்து மாவட்டத்தின் பல பகுதிக்கும் பேருந்து வசதி உள்ளது. மதுரை மற்றும் சென்னைக்கு நேரடி போக்குவரத்து வசதி உள்ளது. மாவட்டத்தின் பிரதான ஊர்களாகிய தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் மற்றும் சுற்றியுள்ள சிற்றூர்களுக்கும் பேருந்து வசதி உள்ளது.

புதியம்புத்தூர் பஞ்சாயத்தானது தமிழகத்திலே சிறப்பு பெற்ற பஞ்சாயத்து. ஒருங்கிணைந்த புதியம்புத்தூரில் நான்கு பஞ்சாயத்து பகுதிகள் உள்ளன அவை புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம், சாமிநத்தம் மற்றும் இராஜாவின்கோவில்.

உழைப்பிற்க்கு முன்னுதாரமாக திகழும் புதியம்புத்தூரில் ஆனி மாதத்தில் ஊரில் ஏறத்தாழ அனைத்து சமுதாயத்தினருக்கும் கோவில் திருவிழா தனித்தனி கோவில்களில் நிகழும் இன்று வரை திருவிழா காலங்களில் சண்டை சச்சரவுகள் என பெரியதாக எந்த பிரச்சனைகளும் வந்ததில்லை.

பொதி அமத்தும் ஊரானது பின் பொதி அமத்தூராகி பின்னர் புதியம்புத்தூராகி இனி வரும் காலத்தில் புதிய முத்தூராக இருக்கிறது. நான் புதியம்புத்தூர் காரன் என்ற பெருமை எப்போதும் எனக்கு உண்டு.

No comments:

Post a Comment