Friday, 23 November 2018

கார்த்திகை திருநாள்

கார்த்திகை திருநாள் என்று தலைப்பை பார்த்தவுடன் வழக்கம் போல ஆன்மீகம் பற்றியது என்று தவிர்க்க வேண்டாம் இது சிறு வயது கார்த்திகை திருநாள் கொண்டாட்டத்தை திரும்பி பார்க்கும் ஒரு பதிவு. 1983ல் பிறந்த நான் 1990 முதல் 2000 வரையிலான காலகட்டத்தில் எங்களது ஊரில் நானும் எனது நண்பர்களும் எப்படி கொண்டாடினோம் என்று பார்ப்போம்..

கார்த்திகை தீபம் இப்போது போல அகல் விளக்கில் ஏற்றாமல் மெழுகுவர்த்தியில்தான் ஏற்றுவோம் அதிலும் கலர் கலராக சிறியதாக இருக்கும் அந்த மெழுகுவர்த்திதான் அல்லது சட்டி மெழுகுவர்த்தி அதனை ஏற்றுவோம். எல்லாமே கார்த்திகை திருநாளுக்கு முந்தைய நாள், திருநாளன்று மற்றும் அதற்கு மறுநாள். மெழுகுவர்த்தி ஏற்றுவது மாலை பொழுதடைந்தவுடன் அப்பறம் வேக வேகமாக சாப்பிட்டுவிட்டு அடுத்த வேலைக்கு போயிடுவோம்..

என்னடா அப்படி வேலைன்னு கேக்குறீங்களா? அதுதான் இந்த கார்த்திகை திருநாள் கொண்டாட்டத்தின் உச்சமே, ஆம் பழைய சைக்கிள் டயர்களை வாங்கி அதில் இரு ஓரங்களில் வரும் இரும்பு கம்பிகளக அகற்றி அதனை சுற்றி வைத்துக்கொள்வோம் அவரவர் வசதிக்கு தகுந்தாற்போல் டயர்களின் எண்ணிக்கை இருக்கும் பெரும்பாலும் ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு ஒன்று வீதம் 3 டயர்களை தாயார் செய்துவிடுவோம். சிலர் பழைய பைக் டயர்களையும் எரிப்பர் வாய்ப்பு இல்லாத சில நண்பர்கள் பழைய செருப்புகளை எரிப்பார்கள்..

டயர்களை அவரவர் வீட்டுக்கு அருகில் எரிப்பதில்லை ஒவ்வொரு தெரு நண்பர்களும் அவரவர் தெரு பசங்களுடன் இணைந்து ஊருக்கு வெளியே மழை பெய்து தண்ணீர் தேங்கியிருக்கும் குட்டைகளுக்கு சென்று தவளை வேட்டை அரைட்டவளை வேட்டை என ஜோராக இருக்கும். இவ்வாறு டயர்களை எரித்துக்கொண்டு போகும் போது ஆங்காங்கே இருக்கும் குப்பைகளை எரிப்பதுவும் வழக்கம் சில நேரங்களில் தவறுதலாக உரக்குழி மற்றும் வைக்கோல் படப்புகளையும் எரித்து அது பஞ்சாயத்து வரை போயிருக்கிறது..

முதல்நாள் 8 மணியில் இருந்து 11 மணி வரை சுற்றிவிட்டு வந்து வீட்டில் பல ஏசசுக்களை வாங்கி விட்டு கமுக்கமாக படுத்து விடுவோம் இரண்டாம் நாள் அன்றுதான் கார்த்திகை திருநாள் அவசர அவசரமாக ஊரைச்சுற்றிவிட்டு எரியும் டயர்களுடன் 11 மணிக்கு கோவில் முற்றத்திற்கு சென்றுவிடுவோம் அங்கு "சொக்கப்பனை" ஏற்றுவார்கள் அதனை பார்த்துவிட்டு பூஜை முடிந்தவுடன் வீட்டிற்கு போவோம் ஏச்சுக்கள் இருக்காது ஏனெனில் கோவிலில் பூஜை முடிந்தவுடன் வீட்டில் இருப்போம். மூன்றாம் நாள் சற்று அதிக நேரம் ஆகிவிடும் வீட்டிலிருந்து ஆட்கள் தேடியே வந்துவிடுவார்கள் வீட்டிற்கு போனால் அடி நிச்சயம் காரணம் மணி 12க்கு மேலும் ஊரை சுற்றுவோம்..

டயர்களில் இருக்கும் இரும்பி கம்பிகளை சிலருக்கு எடுக்க தெரியாது ஆனால் எனக்கு அது கை வந்த கலை ஆகையால் என் பின்னால் கம்பி எடுத்துத்தர சொல்லி என் வயது நண்பர்களும், சிறுவர்களும் சில அண்ணன்களும் வருவார்கள் நானும் வாய்ப்பை பயன்படுத்தி கெத்து காட்டுவேன். தவளை வேட்டையின் உச்சம் என்னவென்றால் சற்று பெரிய தவளை மாட்டிக்கொண்டால் அது சித்ரவதைக்கு உள்ளாக்கப்படும் தகர டப்பாக்களில் வெண்ணீர் போட்டு சூடு ஏற்றி அதில் தவளையை போட்டு கொல்வது மேலும் மாறு கால் மாறு கை என்பது போல ஒரு பக்க முன்னங்காலை வெட்டிவிட்டு மறுபக்க பின்னங்காலை வெட்டுவது என கொடூரமாக இருக்கும் ஆனால் அப்போதெல்லாம் அது ஜாலி..

தெரு நண்பர்கள் ஒன்றாக இணைந்து செல்வதால் சில சமயங்களில் வேற தெரு பசங்க வந்து வம்பளப்பதுவும் அடிதடியாவதும் வழக்கம் மொத்தத்தில் எதிர்காலம் பற்றிய எந்த புரிதலும் கவலையும் இன்றி ஜாலியாக இருந்தோம். இவ்வளவு ஜாலிக்கு மத்தியில் வீட்டில் ஏச்சுக்கள் விழுந்தாலும் "ஓலை கொழுக்கட்டை" தந்து உபசரிப்பார்கள். இப்படித்தான் கார்த்திகை திருநாள் சிறப்பாக இருந்தது ஆனால் இன்று சிறுவர்கள் டயர் எரிப்பதுமில்லை இது போல வாழ்க்கையை அனுபவிப்பதும் இல்லை ஆனால் வழக்கம் போல கோவில் முற்றத்தில் சொக்கப்பனையும் பூஜையும் நடக்கும் அந்த நாளை ஒரு வருடமும் தவறவிடுவதில்லை..