தமிழன் என்றொரு தன்மானம் கொண்ட ஓர் இனம் உண்டு அவன் தனித்திறமைகள் பல பெற்று வரலாற்று புகழுடன் உலகம் சிறக்க வாழ்ந்து வந்தான். தமிழர்களுக்கு வீரமும் காதலும் செறிந்த இலக்கியங்கள் பல உண்டு இவ்வகை வரலாறுகளும் அவற்றை சார்ந்த தமிழ் மரபுகளும் பல உண்டு. பிற்காலங்களில் தமிழர் வரலாறுகளையும் தமிழர் அடையாளங்களையும் சிறிது சிறிதாக இழந்து வந்த தமிழன் இன்று நான் தமிழன் என்ற அடையாளத்தை இழக்குமளவிலும் தூங்கி வழிவது துயரமானது. இங்கே நான் எழுத இருப்பது தமிழன் என்ற ஓர் இனத்திற்கானது மட்டுமல்ல இந்தியர் அனைவருக்குமானது இன்னும் சொல்லப்போனால் மனித இனத்திற்கானது விழித்துக்கொள்.
இதுவரை..
* கரித்தூள், உப்பு, மரக்கிளை கூடாது -- பற்பசைகளின் ஆதிக்கம்.
* அரிசி உணவு கூடாது -- நீரழிவு நோயாளிகளின் பெருக்கம்.
* கள் இறக்க கூடாது -- சீனி விற்பனை உயர்வு.
* சேவல் சண்டை கூடாது -- பிராய்லர் கோழி அதிக வரத்து.
* ஜல்லிக்கட்டு கூடாது -- பால் பொருட்கள் விலை உயர்வு.
இனி..
* தேன் கூடாது.
* இளநீர் கூடாது.
*வாழைப்பழம் கூடாது.
இப்படியே இப்பட்டியல் நீளும்.
கரித்துள் அல்லது உப்பு அல்லது மரக்கிளைகளை வைத்து பல் தேய்ப்பதால் பல்லின் ஊண்கள் சிதைவுற்று பல் பிரச்சனை ஏற்படும் என விளம்பரப்படுத்தினான், அத்துடன் பற்பசையை (டூத் பேஸ்ட்) விளம்பரம் செய்தான். ஆம், அவன் நினைத்தது போல் நாம் பற்பசை மற்றும் பல் துலக்கி (டூத் ப்ரஷ்) கலாச்சாரத்திற்கு மாறினோம். அவன் அடுத்த கட்டமாக ஓர் நாளைக்கு காலை மற்றும் இரவு இரண்டுமுறை பயன்படுத்த பரிவுரைத்தான் நாமும் பின்பற்றினோம் வளர்ந்தது அவனது வியாபாரம் மட்டுமல்ல நமது பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும்தான். இன்று வயது நாற்பதை கடந்தவனுக்கு பல் அடைப்பு இல்லாமல் இல்லை.
அரிசி உணவுகள் நீரழிவு நோயை உருவாக்கும் கோதுமை உணவுகளை சாப்பிடுங்கள் என மருத்துவ உலகம் பயம் காட்டியது உடனே அதை ஆராயாமல் நாம் உண்ணும் சாதாரண அரிசியில்தான் பிரச்சனை என்றெண்ணி விலை அதிகமாக இருக்கும் பட்டை தீட்டப்பட்ட உண்மையில் சத்து நீக்கப்பட்ட அரிசிகளை உண்ண ஆரம்பித்தான். இன்று மருத்துவ ஆலோசனையில் கோதுமை உணவுகள் தவிர்த்து ஓட்ஸ் மாதிரியான உணவுகளை பரிந்துரைக்கிறார்கள். நீ உழுது உண்டாக்கிய உணவை உண்ண வேண்டாம் என்றுரைக்கும் போதே உன் மண்டையில் ஏன் ஏறவில்லை.
கள் இறக்க கூடாது என்றவுடன் பதநீருக்காக கூட பனை ஏறுபவர் யோசித்தார் இன்று பனை ஏறும் தொழிலாளிகள் கூட வேறு தொழில் தேடி சென்றுவிட்டனர். கருப்பட்டி மற்றும் பனை பொருட்கள் விலை பன்மடங்கு உயர்ந்து போனது. கருப்பட்டிக்கு பதிலியாக சந்தையிடப்பட்ட சீனி இன்று பலரும் பயன்படுத்தும் பொருளானது. பனை பொருட்களின் நன்மையும் அதன் பெருமையும் தெரியாமல் போனது.
சேவல் சண்டை கூடாது என்றவுடன் சேவல் வளர்பதை குறைத்தான். சேவல்தான் நாட்டுக்கொழிகளுக்கான இனப்பெருக்க ஜோடி என்பதை மறந்தான். இன்று சேவல் மற்றும் நாட்டுக்கோழிகள் காண அரிதாகிப்பொனது. பிராய்லர் கோழி என்னும் உயிர்கொல்லும் உணவுப்பொருள் சந்தைக்கு வந்தது நாமும் உண்டு நம்மை அளித்து நம் சந்ததியையே பிராய்லர் கோழிகளை உண்ண வைத்து நாமே கெடுக்கிறோம்.
ஜல்லிக்கட்டு கூடாது என்றவுடன் காளைகளை அடிமாட்டு விலைக்கு விற்றனர் விவசாய நிலங்களை உழுவதற்கு கூட பயன்படுத்த மனம் வரவில்லை காரணம் அவசர உலகில் உழவுந்து (ட்ராக்டர்) வசதியாக உள்ளது. காளைகளை அடிமாட்டு விலைக்கு விற்றதினால் பல காளை இனங்கள் இல்லாமல் போனது. காளை இனங்கள் குறைவால் தரமான நாட்டுப்பசு இனப்பெருக்க வழியின்றி இன்று நாட்டுப்பசு இல்லாமல் ஆரோக்கியமான பால் கிடைக்க வழியில்லாமல் சோயா பால் அல்லது மாவுப்பால் கலாச்சாரத்தை நோக்கி பயணிக்கிறது.
இன்னும் இது போல நிறைய உள்ளன ஒரு பொருளை அரசோ அல்லது வேறு யாரோ தடை செய்வதாலோ அல்லது நல்லதல்ல என்றாலோ என்ன என்பதை யோசிக்காமல் அதை ஆராயாமல் அப்பொருளின் தீமையை மட்டுமே ஆராய்வது ஆனால் அதன் பின்னாள் உள்ள அரசியல், பொருளாதார, மற்றும் மக்களின் வாழ்வாதாரங்களை சிந்திப்பதில்லை. இப்படியே போனால் இன்னும் சிறிது நாட்களில் தேனில் நஞ்சுள்ளது தேன்கூட்டில்யிருந்து எடுத்து அப்படியே உண்ண வேண்டாம் எங்கள் நிறுவன தயாரிப்பான தேனை வாங்கி நக்குங்கள் என்பார்கள், அப்பறமாக இளநீர் பருகினால் தென்னை மரங்களை தாக்கும் ஒருவகை நோய் நம்மை தாக்கலாம் ஆதலால் எங்களது நிறுவன தயாரிப்பான இளநீர் பானத்தை பருகுங்கள் என்பார்கள். அடுத்ததாக வாழைப்பழம்தான் அனைத்துவித ஒவ்வாமை நோய்களுக்கு காரணம் என்று ஏற்கனவே சந்தையில் உள்ள ஹைபிரட் வாழைப்பழங்கள் சிறந்தது என்பார்கள். இதுபோல பல உள்ளன.
இவ்வாறாக திட்டமிட்டு பண முதலைகளும் பன்னாட்டு நிறுவனங்களும் தனது தயாரிப்புகளை சந்தைப்படுத்த மனிதனை ஓர் கருவியாக பயன்படுத்துகின்றன. தமிழன் உட்பட அனைவரும் அதை புரிந்துகொள்ளாமல் ஆட்டுமந்தை கூட்டம் போல் பின்னாலே செல்வது திடீர் ஞானோதயம் பெற்று பொங்குவது இதெல்லாம் மிகப்பெரிய முட்டாள்தனம். காலம் தாழ்த்தி போராடினாலும் மக்களை பிரிக்க அரசியல்வாதிகள் மற்றம் பண முதலைகள் இன வேறுபாடு, மொழி வேறுபாடு, சாதி வேறுபாடுகளை பயன்படுத்துகின்றனர்.
அரிசிக்காக போராடினால் அது டெல்டா விவசாயிகள் போராட்டம் என்பது, ஏன் நீ சாப்பிடவில்லையா? கள் இறக்க போராடினால் குறிப்பிட்ட சமுதாயத்தை சார்ந்த விசயம் என்பது, ஏன் உனக்கு கருப்பட்டி மற்றும் பனைமரத்தின் வரலாற்றை யாரும் சொல்லித்தரவில்லையா? ஜல்லிக்கட்டுக்காக போராடினால் ஏதோ மிருகங்களை வதைப்பதை ஆதரிப்பது பொல் சித்தரிப்பது இதில் சினிமா பிரபலங்கள் வேறு வாயை வைத்துக்கொண்டு சும்மா இருப்பதில்லை.
தமிழா சிந்தி..
ஒரு பொருளுக்கு தடை என்றவுடன் உடனே அதன் ஆதாரம் என்ன, அரசியல் சார்ந்த பின்புலம் என்ன, பொருளாதார நிலைப்பாடு என்ன, மக்களின் வாழ்வாதாரத்தில் பாதிக்கும் காரணிகள் என்ன என்பதனை ஆராய்ந்து புறந்தள்ள வேண்டிய விசயங்களை தள்ளிவிட்டு தேவையான விசயங்களை பின்பற்றினால் உனக்கு இன்றிருக்கும் இழிநிலை தேவையில்லை. பின் வரயிருக்கும் கருத்துக்களில் சமூகத்தை சாடியிருப்பேன் அரசியலை சாடாமல் விடுத்திருப்பேன். காரணம் ஆயிரம் அரசியல் காரணம் இருப்பினும் நாமும. இச்சமூகமும் இதற்கு மூலம்.
ஆலங்குச்சி அல்லது வேலங்குச்சி வைத்து பல் துலக்கிய உனக்கு சொத்தைப்பல் பற்றிய சிந்தனை எழுந்ததுண்டா? குளிக்க நீர்நிலைகளை தேடி சென்றாய் நீர்நிலைகள் அருகிலே ஆலமரம் மற்றும் வேப்பமரங்களை நட்டு வைத்தாய். நீர் நிலைகளை காக்க அதன் ஓடைகளை பராமரித்தாய், ஓடைகளுக்காக மற்றும் நீர் வரத்திற்காக வாய்கால்களை முறையாக அமைத்து பராமரித்தாய் மழை எங்கு பெய்தாலும் நீர்நிலைகள் ஏற்றம் பெற்றது. ஆனால் இன்று உன் அவசர உலகில் நீர்நிலைகள் எங்கே? பகட்டு வாழ்க்கைக்காக பேஸ்ட் & ப்ரஷ் ஆனது. அவசர குளியலுக்காக பாத்ரூம் ஆனது. நீர் வேண்டுமாயின் நிலத்தடி நீர் இல்லையேல் லாரி மூலமாக விலை கொடுத்து நீர். இப்ப சொல்லுங்க தவறு யார் பக்கம்?
அரிசி உணவால் நீரழிவு நோய் ஆரம்பம் என மருத்துவ உலகம் பொய்யுரைத்தவுடன் அதைப்பற்றி சிறிதும் ஆராயாமல் உழைத்து உழுது பாடுபட்டு உருவாக்கிய நெல்மணிகளை உழைத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்காமல் பணத்தை பகிர வேண்டி தனது சொந்த உழைப்பால் கைக்குத்தல் மூலமாக சாதாரண அரிசியாக உருவாக்காமல் அதிக விலைக்காக பட்டை தீட்டி கூடுதல் விலைக்கு விற்கவும் பின்னர் தேவைப்படின் வாங்கவும் செய்தாய். அது மட்டுமா தமிழ் பெயருடைய அரிசிகளை மட்டமாக எண்ணி IR8 போன்ற ஆங்கிலப்பெயரால் அழைக்கப்படும் அரிசிகளை உயர்வாக நினைத்தாய். இன்று கைக்குத்தல் அரிசியை உண்ண மறுக்கும் நம்மிடம் குற்றம் ஏதுமில்லையா?
கள் என்பது ஓர் இயற்கை பானம் அதில் போதை கிடையாது ஆனால் பிற்காலத்தில் அதில் போதைப்பொருட்களை கலந்து விற்று சம்பாதிக்க முற்பட்டான். அரசு தடை செய்கிறது காரணம் கள் அல்ல இறக்கிய கள் விற்கவில்லை எனில் சுண்ணாம்பு கலந்து பதநீர் செய்கிறான், அதுவும் மீதமானால் கருப்பட்டி செய்கிறான், இவனால் பன்னாட்டு நிறுவன பெப்சி, கோக் போன்ற நிறுவனங்களும் சீனி ஆலை அதிபர்களும் பாதிக்கின்றனர் அதனால்தான் அரசு கள் என்ற பெயரை பயன்படுத்தி தடுக்கிறது. தடுத்தாலும் தடுமாறாமல் கள் இறக்கி பதநீராகவோ அல்லது கருப்பட்டி செய்யவோ முற்படலாம் ஆனால் இம்மாதிரியான கிராமப்புறம் சார்ந்த தொழில்களுக்கு தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் வருவதில்லை காரணம் தமிழகத்தில் பரம்மபரை தொழில் கேவலமாக சித்தரிக்கப்படுகிறது. எதற்கெடுத்தாலும் சாதிச்சாயல் அல்லது சமூக அந்தஸ்து சார்ந்த சாடல் ஆகையால் ஒரு பனையேறியின் மகன் பனையேற நினைப்பதில்லை ஒரு முடி திருத்துவரின் மகன் முடி திருத்தும் நிலையம் வைக்க ஆசைப்படுவதில்லை. ஆக இதிலும் தவறு சமூகமாகிய நம்மிடம் உள்ளது.
சேவல் சண்டைக்கு தடை போட்டார்கள் அதற்கு முன்னதாக பிராய்லர் கோழி முழு அளவில் இந்தியா முழுவதும் குறிப்பாக அசைவ உணவகங்களில் கிடைக்க ஏற்பாடு செய்தனர். இன்று ஜல்லிக்கட்டுக்கு இருக்கும் விறுவிறுப்பும் எதிர்பார்ப்பும் ஆதரவும் அன்று சேவல் சண்டை தடைக்கு இல்லை ஒரு வேளை இருந்திருந்தால் இன்று ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது அல்லது அரசு எவ்வளவு ஒத்துழைக்கும் என்ற புரிதல் இருந்திருக்கும் ஆனால் அன்று சேவல் சண்டை தடையை குறிப்பிட்ட சிலர் எதிர்த்தனர் அவர்களும் வழக்கு வம்பு பயம் காரணமாக அதனை பெரிய அளவில் எதிர்க்கவில்லை. இதிலும் தவறு நம்மில் உள்ளது.
ஐல்லிக்கட்டு தடை இந்த ஒற்றை வார்த்தையால் இன்று தமிழகத்தை ஒரே சிந்தனையால் இணைத்திருக்கிறது உச்சநீதிமன்றம். இந்த தடைக்கான காரணம் இன்று பலருக்கும் தெரியும் போராட்ட களத்திலிருக்கும் பலர் அந்த பீட்டா அமைப்பை தடை செய்தால் சரியாகிவிடும் என நம்புவது எவ்வளவு பெரிய அபத்தம் இன்னும் புரிதலின்றி பல இளைஞர்கள் போராட்ட களத்தில் உள்ளனர். உங்களின் சமூகம் சார்ந்த அரசியல் ஈடுபாட்டை ஆதரிக்கிறேன் ஆனால் கண்மூடித்தனமாக இருப்பதை எவ்வாறு அனுமதிக்க முடியும். இளைஞர் சக்தியை வீண்டிப்பதுவும் அறிவுடையோர் அவர்களை வழிநடத்தாமல் இருப்பதுவும் மிகமிக கொடுமையான நிகழ்வு.
தீர்வு...
தமிழனின் தனித்தன்மையை இழக்காமல் இருக்க அதிகாலையில் எழுந்திட வேண்டும். கால்நடையாக நடந்து சென்று காலை கடன்களை முடித்து நீர்நிலைகளில் குளிக்க வேண்டும். குளித்தவுடன் சூரியனை வணங்க வேண்டும் (மதத்திற்கு அப்பாற்பட்டு தமிழனாக). அவரவர்க்கு தெரிந்த கைத்தொழிலை செய்ய வேண்டும். அவர்களது தொழிலில் தனது தலைமுறையினரை ஈடுபடுத்த வேண்டும். நல்ல கல்வி பயில வேண்டும் மற்றும் உன் சந்ததிக்கு நல்ல கல்வி புகட்ட வேண்டும். கல்வியினால் உயர் பதவியடைந்தாலும் தனது குலத்தொழிலை மறக்கக்கூடாது. சிறிய அளவு நிலமானாலும் பயிரிட்டு விளைவிக்க வேண்டும். இரசாயன உரங்களை பயன்படுத்தாமல் இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும். ஆடு, மாடு, கோழி, நாய், பன்றி மற்றும் பூனை போன்ற வளர்ப்பு பிராணிகளை வளர்க்க வேண்டும். இயற்கையான வழிகளில் விளைவித்த உணவுகளை உண்ண வேண்டும். அசைவ பிரியர் என்றால் வளர்ப்பு பிராணிகளை அதிகமாகவளர்க்க வேண்டும். வளர்ப்பு பிராணிகளின் உழைப்பையும் முழுமையாக பயன்படுத்த வேண்டும். இரசாயனப் பொருட்களை தவிர்த்திட வேண்டும் அதற்கு பதிலியாக இருக்கும் இயற்கை வழி பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். அக்கம் பக்கத்தினரிடம் நன்றாக பழகி விளை பொருட்களை விலை பொருட்களாக பார்க்காமல் முடிந்தவரை பண்டமாற்று முறையை பின்பற்ற வேண்டும்.
பணத்தை தேடி ஓடாமல் நற் பண்பை நாடிப்போக வேண்டும். அறிவியலின் வளர்ச்சியை பயன்படுத்தும்போது நமது அடிப்படை மாறாமல் பின்பற்ற வேண்டும். சமூகத்தில் அனைவரும் ஒன்றாக மதிக்கப்பட வேண்டும். இவ்வாறான நல்ல விசயங்களை விடுத்து கால ஓட்டத்தில் ஓடிவிட்டு எங்கோ சென்றபின் அய்யோ என் பண்பாடு போச்சே என் கலாச்சாரம் பேச்சே என்பது நலமா? உனது நடை உடை பாவனை அனைத்தும் அயல்நாட்டு பாணி மற்றும் உண்ணும் உணவு முதல் உறங்கும் மெத்தை வரை அயல்நாட்டு பாணி. இவ்வாறாக நான் அனைத்திலும் அயல்நாட்டு மோகம் கொண்ட உனக்கு ஏன் இந்த வரட்டு கௌரவம். உணவகங்களில் சுத்திகரிக்கப்பட்ட நீர் வாங்கி பருகும் உணக்கு உள்ளூர் தண்ணீரின் ருசி என்ன தெரியும்.
பல் பிரச்சனைகளை சரி செய்ய ஆளுக்கொரு ஆலமரமோ அல்லது வேப்ப மரமோ வளர்க்கலாம். அதிக விலைக்கு அரிசியை வாங்காமல் கைக்குத்தல் அரிசியை வாங்கி சமைத்து உண்ணலாம். அழகிய பாக்கெட்களில் வரும் சமையல் எண்ணெய்க்கு பதிலாக செக்கில் ஆட்டும் தூய்மையான எண்ணெய்களை பயன்படுத்தலாம். சீனியை சேர்க்க மாட்டேன் கருப்பட்டி போதும் என்ற நிலைப்பாட்டை எடுக்கலாம். அதிக அளவில் நாட்டுக்கோழிகளையும் சேவல்களையும் வளர்க்கலாம். வீட்டுக்கொரு பசு வளர்க்கலாம். காளை மாடுகள் ஜல்லிக்கட்டு அனுமதி கிடைத்தாலும் கிடைக்காவிடினும் நிறைய வளர்க்கலாம். இவ்வாறு பால் வளத்தையும் பெருக்கலாம் மக்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்தலாம். இப்படி அரசுக்கும் பண முதலைகளுக்கும் எதிரான நிலைப்பாட்டை ஆக்கபூர்வமாக சிந்தித்து செயல் படுத்தலாம்.
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படிகிறது.